கோவை அருகே ஒரே பகுதியில் 26 பேருக்கு கொரோனா தொற்று: மக்கள் அச்சம்
கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி.
கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலையம் அருகே உள்ள செல்வபுரம் காலனியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 10 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் இன்று செல்வபுரம் காலனி பகுதியில் மட்டும் 17 நபர்களுக்கு தொற்று உறுதியானது. மேலும் கருமத்தம்பட்டி கொங்கு மாநகரில் 2 நபர்களுக்கும் உறுதியானது. அப்பகுதியில் மொத்தம் 216 பேருக்கு எடுக்கப்பட்ட சோதனையில், 26 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து தொற்று பாதித்த பகுதிகளில் தகர சீட் வைத்து அப்பகுதி முழுவதும் அடைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து வெளியே வர அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை பெற கருமத்தம்பட்டி பேரூராட்சி மூலம் 3 நபர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பேரூராட்சி சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தும், சாலையோர சாக்கடையில் கிருமி நாசினி தெளித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொற்று பாதித்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடிசியா சிகிச்சை மையம் மற்றும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu