பெண் குழந்தைகளை ஊக்குவிக்க மரக்கன்றுகளை நட்டு வைத்த கோவை ஆட்சியர்

பெண் குழந்தைகளை ஊக்குவிக்க மரக்கன்றுகளை நட்டு வைத்த கோவை ஆட்சியர்
X

பெண் குழந்தை உடன் புகைப்படம் எடுத்த தந்தை 

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கணியூர் ஊராட்சியில் 2024 ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளை ஊக்குவிக்கவும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கணியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சனியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு 39 மரக்கன்றுகளை நடவு செய்தார். தொடர்ந்து தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் ஊஞ்சபாளையம் கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர், பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மாணவர்களுடன் சேர்ந்து தூய்மை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் ஊஞ்சபாளையத்திலிருந்து கணியூர் டோல்கேட் வரை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவ மாணவிகள், பொது இடங்களை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கணியூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர். பின்னர் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா மஞ்சள் பைகள் வழங்கப்பட்டன. மஞ்சள் பைகளை பெற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள், மாவட்ட ஆட்சியருடன் இணைந்து திருமண மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மஞ்சள் பை இயக்க விழிப்புணர்வு போட்டோ பாயிண்ட் அருகில் மஞ்சள் பையுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கோவை கூடுதல் வளர்ச்சி ஆட்சியர் ஸ்வேதா சுமன், சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ், கணியூர் ஊராட்சித் தலைவர் வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!