அரசியல் களத்துக்கு வந்துள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் : வானதி சீனிவாசன்
Coimbatore News- வானதி சீனிவாசன்
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கைத்தறி ஆடை அணி வகுப்பு போட்டி நடைபெற்றது.
இதில் கண்களை கவரும் வகையில் விதவிதமான வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்ட கைத்தறி ஆடைகளை அணிந்தபடி மாணவ மாணவிகள் ஒய்யாரமாக நடந்து வந்தது பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் நடிகை நமீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். முன்னதாக இருவரும் கைகளை கோர்த்தபடி அணி வகுப்பு மேடையில் நடந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களுக்கு வானதி சீனிவாசன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கைத்தறி நெசவு குறித்து கல்லூரி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏழாவது ஆண்டாக கைத்தறி நெசவு ஆடை அணிவகுப்பு போட்டிகளை நடத்தி வருகிறோம். இதன்மூலம் கைத்தறி நெசவு குறித்த பாரம்பரியம், ஏன் கைத்தறி நெசவாளர்களை ஆதரிக்க வேண்டும்.
கைத்தறி நெசவு உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளித்து வருகிறோம். ஆண்டுதோறும் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 2490 மாணவ மாணவிகள் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். கைத்தறி ஆடைகளை விட்டு மக்கள் விலகிச் சென்று விட்ட நிலையில், மீண்டும் கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
தமிழகம் இது போன்ற நூற்றுக்கணக்கான கொடிகளையும், தலைவர்களையும் பார்த்திருக்கிறது. புதிதாக அரசியல் களத்தில் போட்டியாளராக சக அரசியல்வாதியாக களம் கண்டுள்ள நடிகர் விஜய்க்கு பாஜக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள், அத்திக்கடவு அவிநாசி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கடந்த ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டிருந்தாலும், தற்போது பணிகள் முடிக்கப்பட்டு திமுக அரசால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கோவைக்கு செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட நிறைய திட்டங்கள் அறிவித்துள்ளனர்.
கோவைக்கு திமுக அரசு அறிவித்துள்ள திட்டங்களை எவ்வளவு விரைவில் முடிக்கிறார்கள் என்பதை பொறுத்து அது குறித்து கருத்து கூற முடியும். அரசாங்க நிகழ்வுகளை கூட்டணி பார்வையில் பார்ப்பது தவறானது. அதிமுகவோடு கூட்டணியில் இல்லாத காலகட்டத்தில் கூட பாஜகவின் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் அரசு விழாக்களில் பங்கேற்றிருக்கிறார்கள். அரசாங்கங்களுக்குள் உறவை அரசியலோடு பொருத்திப் பார்க்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu