கோவையில் நண்பனின் சடலம் மீது அமர்ந்து பூஜை செய்த அகோரி சாமியார்

கோவையில் நண்பனின் சடலம் மீது அமர்ந்து பூஜை செய்த அகோரி சாமியார்
X

நண்பனின் உடல் மீது அமர்ந்து பூஜை செய்த அகோரி சாமியார்.

கோவையில் இறந்து போன நண்பனின் சடலம் மீது அமர்ந்து பூஜை செய்த அகோரி சாமியாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் 8 வருடங்களுக்கு முன்பு சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மணிகண்டனுக்கு, கோவை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக பணியாற்றும், பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் தனது மனைவியை பிரிந்து அந்த பெண்ணுடன் வாழ தொடங்கி விட்டார்.

இது தொடர்பாக மணிகண்டன் மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாலும், அவர் மனைவியுடன் செல்லாமல், அந்த பெண்ணுடனேயே வாழ்ந்து வந்தார். கடந்த 27-ந் தேதி மணிகண்டனுக்கும், அவருடன் இருந்த பெண்ணுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை எரியூட்டுவதற்காக சூலூர் மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே இறந்து போன மணிகண்டனுக்கு, திருச்சியை சேர்ந்த அகோரியான மணிகண்டன் என்பவர் நண்பராக இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மணிகண்டன் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேள்விப்பட்டதும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்கிருந்து தனது சீடர்களுடன் புறப்பட்டு கோவை சூலூருக்கு வந்தார்.

பின்னர் மின் மயானத்திற்கு வந்த அவர், இறந்து போன உடலுக்கு மரியாதைகள் செலுத்தி பூஜை செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து இறந்த மணிகண்டன் ஆன்மா சாந்தி அடைய வேண்டி அகோரி அவரது உடல் மீது ஏறி அமர்ந்து தியானம் செய்தார்.இந்த பூஜைகள் அனைத்தும் நிறைவடைந்ததும் மணிகண்டன் உடல் எரியூட்டப்பட்டது. இறந்து போனவரின் உடல் மீது ஏறி அமர்ந்து அகோரி பூஜை செய்த சம்பவம் இந்த பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

திருச்சி அகோரி சாமியார் திருச்சி அரியமங்கலம் பகுதியில் தனியாக ஒரு கோவிலை நடத்தி வருகிறார். அங்கு அவர் ஏற்கனவே இறந்து போன தனது தாயாரின் உடல் மீது அமர்ந்து பூஜை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!