கோவையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோவையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
X
வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கோவை மாவட்டத்தில் இருந்து 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் உள்ள தொழில் நிறுவனங்களில் வெளிமா வட்டங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்வது வழக்கம். தற்போது வருகிற 12-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி கோவையில் உள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். பேருந்துகள், ரயில்களில் முன்பதிவு செய்து ஊருக்கு செல்வதற்கு தயாராகி உள்ளனர்.

கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெரும்பாலானவை நிரம்பி விட்டன. குறிப்பாக நாளை மற்றும் நாளை மறுதினத்திற்கு அனைத்து பேருந்துகளும் நிரம்பி காணப்படுகிறது.

தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் இருந்து மதுரை, தேனி, சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகள் நாளை முதல் வருகிற 11ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

இந்த பேருந்துகளில் பயணிக்க ஆயிரக்கணக்கான மக்கள் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். தீபாவளி தொடர்விடு முறையை யொட்டி நாளை முதலே பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள்.

காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் சூலூர் பேருந்து நிலையம் உள்பட 4 இடங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

திருச்சி, கரூருக்கு செல்ல கூடிய பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்தும், மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், சத்தியமங்கலம் பகுதிக்கும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டி, கூடலூர் பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு வசதியாக காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அரசு பேருந்துகள் மட்டுமின்றி ஆம்னி பேருந்துகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணத்தை தொடருகிறார்கள்.

10ம் தேதியே அதிகமானோர் பயணம் செய்ய விரும்புகிறார்கள் என்பதால் அன்றைய தினம் அதிகளவிலான கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!