திமுக காணாமல் போகும் என்றவர்கள் தான் காணாமல் போவார்கள் : உதயநிதி ஸ்டாலின்
கோவை விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கோவை கொடிசியா அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் 228 ஊராட்சி மன்றங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் உள்ள 12600 ஊராட்சிகளுக்கு 33 வகையான உபகரணங்கள் 86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் சிறப்பாக பயிற்சி செய்து விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும். இந்திய ஒன்றியம் திரும்பி பார்க்கும் வகையில் விளையாட்டு துறை சார்ந்து முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் 98 பதக்கங்களை தமிழ்நாடு பெற்று இரண்டாம் இடம் வந்தது. அடுத்த முறை முதலிடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விளையாட்டு துறைக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது.
பட்ஜெட்டில் பள்ளிக் கல்வி துறைக்கு 44 ஆயிரம் கோடியும், விளையாட்டு துறைக்கு 440 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மகனின் துறைக்கு தந்தை குறைவாக தான் நிதி ஒதுக்கியுள்ளார். தந்தை தரவில்லை. நண்பர் நீங்கள் தரலாம். விளையாட்டு வகுப்புகளை வாங்கி கணிதம், அறிவியல் பாடம் எடுக்காமல் ஆசிரியர்கள் விளையாட விட வேண்டும். விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை பெறும் வீரர்களுக்கு 6 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி ஆரோக்கியம், புத்துணர்சி உடன் இருக்க வேண்டும். கலைஞருக்கு அரசியல்வாதி, இலக்கியவாதி, பேச்சாளர் என பல முகங்கள் உண்டு. ஆனால் விளையாட்டிற்கும், கலைஞருக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு சந்தேகம் உண்டு. கலைஞர் சிறு வயதிலேயே களத்தில் இறங்கி விளையாடியவர். பின்னர் அரசியல் களத்திலும் விளையாடியவர். கலைஞர் ஒரு ஆர்வம் மிக்க விளையாட்டு வீரர்.
கலைஞர் எனர்ஜி உடன் வேறு ஒருவரின் எனர்ஜியை ஒப்பிட்டு பார்க்க முடியாது. வசதிகள் இல்லாத காலத்தில் கிராமம் கிராமமாக சென்று கட்சியை வளர்த்தார். அரசியல், சினிமா, இலக்கியத்தில் ஒரே நேரத்தில் கொடி கட்டி பறந்தவர். கலைஞரின் எனர்ஜி, உழைப்பு விளையாட்டு வீரர்களுக்கு வர வேண்டும். உழைத்து கொண்டிருந்தால் வெற்றி தேடி வரும் என உழைத்து கொண்டிருந்தார். விளையாட்டு மட்டுமின்றி நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் வெற்றி பெற உழைக்க வேண்டும்/
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து தேர்தலுக்கு பிறகு திமுக காணாமல் போகும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியது குறித்த கேள்விக்கு, “அப்படி சொன்னவர்கள் தான் காணாமல் போய் உள்ளார்கள்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu