கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடம் : முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..!
புதிய திட்டங்களை துவக்கி வைத்த ஸ்டாலின்
கோவை மாவட்டத்தில் புதிய திட்டங்களை துவக்கி வைப்பதற்கும், நடைபெற்று வரும் பணிகளை பார்வையிடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில், கோவை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, நகராட்சி துறை அமைச்சர் நேரு, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி , தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன், தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து கட்சியினர் கோவை விமான நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் திரண்டு இருந்த திமுக தொண்டர்களின் வரவேற்பை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து விளாங்குறிச்சி சாலையில், டைடல் பார்க் வளாகத்தில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 2,94,382 சதுர அடிப்ப்பளவில் கட்டப்பட்ட புதிய தகவல் தொழில் நுட்ப கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவருடன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் வளாகத்தை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பார்வையிட்டார்.
முன்னதாக புதிய கட்டிடத்தினை திறந்து வைக்க வந்த முதல்வருக்கு கோவை காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. கோவையில் முதல்வர் வருகையை முன்னிட்டு 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் கோவை விமான நிலையத்திலிருந்து, நிகழ்ச்சி நடைபெறும் டைடல் பார்க் வளாகம் வரை காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu