தமிழகத்தில் இனி ஆன்மிகம் இல்லாத அரசியல் இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

தமிழகத்தில் இனி ஆன்மிகம் இல்லாத அரசியல் இல்லை: தமிழிசை செளந்திரராஜன்
X

செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை செளந்திரராஜன்.

தமிழகத்தில் இனி ஆன்மிகம் இல்லாத அரசியல் இல்லை என தமிழிசை செளந்திரராஜன் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரதிய ஜனதா கட்சியின் அகில பாரத தலைவர் ஜெ.பி.நட்டா இன்று கோவை வந்து பாலக்காடு செல்கிறார். அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அண்ணாமலை வெளிநாடு செல்வதையடுத்து கட்சி அமைத்துள்ள நிர்வாக குழு எச்.ராஜா அவர்கள் தலைமையில் செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை வைத்து இக்குழுவும் கட்சியில் உள்ள அனைவரும் தொடர்ந்து செயல்படுவோம்.

நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறேன். நான் சுமார் நான்கரை ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றினேன். முழு நேரமாக கட்சியில் உழைத்தவர்களுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியின் காரியகர்த்தாவாக தொடர்ந்து நாங்கள் செயல்படுவோம். இடைக்கால தலைவர் என பல பெயர்கள் பேசப்பட்டாலும் அவை அனைத்தும் யூகங்கள் தான். எந்த எதிர்பார்ப்பும் இன்றி மகிழ்ச்சியாக கட்சியில் பணியாற்றி வருகிறேன். இந்த கட்சி தான் என்னை ஆளுநர் எனும் உயர் பதவியில் அமர வைத்தது. அதற்கு நன்றி உணர்வோடு செயல்பட்டு வருகிறேன். கட்சிக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நான் பணியாற்றி வருகிறேன்.

தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் பல கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அந்த பட்டியலில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ளன. அவை தங்களது விரிவாக்க பணிகளை மட்டுமே மேற்கொள்கின்றனர். இதனை புதிய முதலீடாக கருத முடியாது. சம்மரிக்க்ஷா அபியான் திட்டம் என்பது குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள திட்டமாகும். இதற்கென பிரத்தியேகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். தமிழக அரசு இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் நிதி மற்றும் கேட்கிறது. அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் மாணவர்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது. தமிழ் மொழிக்கு பிரதமர் அளித்துள்ள மரியாதையை போல தமிழகத்தில் உள்ள தலைவர்கள் கூட கொடுத்ததில்லை. ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ் தான் நமது உயிர், நமது வாழ்வு, அதே நேரத்தில் மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாது என தமிழ் தாய் நினைப்பதில்லை.

மலையாள திரைத்துறையில் பெண்கள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக நாங்களும் குரல் கொடுத்துள்ளோம். பெண்கள் மீதான பாலியல் எந்த துறையில் இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. தமிழக வெற்றி கழகத்தை துவங்கியுள்ள விஜய், ஷீரடி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிற அடிப்படையில் கடவுள் நம்பிக்கையோடு அவர் செயல்படுவது வரவேற்கத்தக்கது. கடவுள் இல்லை எனும் நாத்திக கொள்கை பேசும் மாநிலத்தில் இருந்து ஷீரடி கோவிலில் தரிசனம் செய்து மக்கள் சேவை செய்வது வரவேற்கத்தக்கது. இனிமேல் ஆன்மீகம் அல்லாத அரசியல் என எதுவும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி