கோவையில் அண்ணாமலையை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

கோவையில் அண்ணாமலையை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்
X

கோவையில் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஜி.கே.வாசன்.

கோவையில் அண்ணாமலையை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்தார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவை சிங்காநல்லூர் பகுதியில்பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர் பேசியதாவது:-

என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் திமுகவின் ஊழல்களை அண்ணாமலை வெளிப்படுத்தியதுடன், பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்றுள்ளார். அண்ணாமலை வெற்றிக்கு பிறகு சிறுகுறு தொழில்களின் வளர்ச்சி அதிகரிக்கும். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு அண்ணாமலையால் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. கோரிக்கைகளை 100% நிறைவேற்றக்கூடிய நல்ல வேட்பாளர் அண்ணாமலை. அண்ணாமலை கோவையில் நிற்பது நிறைய பேருக்கு வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது. திமுக, அதிமுக கட்சிகளால் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க முடியவில்லை.

சிறுபான்மை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய ஆட்சி பாஜக ஆட்சி. சிறுபான்மையினருக்கான வேலை வாய்ப்புகளை தாமதமின்றி செய்து கொடுக்கக்கூடிய கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி. திமுக அதிமுகவை பொருத்தவரை இஸ்லாமியர்களின் வாக்கு தான் தேவை. ஏன் அவர்கள் ஒரு தொகுதியில் கூட இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என கேட்கிறேன். மதவாதமும் கிடையாது, மதச்சார்பின்மையும் கிடையாது, மதநல்லிணக்கம் மட்டுமே. சிறுபான்மை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க கூடிய அரசு மத்திய அரசு.

அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை இந்த அரசு பிரதிபலிக்கின்றது. மாநில அரசின் வேதனையான சாதனைகளை நம்மால் சொல்லாமல் இருக்க முடியாது. தமிழகம் தான் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலம் என்று மார்தட்டி கொள்கின்றனர். எதில் நம்பர் ஒன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். போதை பொருள் நடமாட்டத்தில் நம்பர் ஒன். சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருப்பதில் நம்பர் ஒன். டாஸ்மாக் உற்பத்தியிலும் நம்பர் ஒன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசில் திமுக அரசு நம்பர் ஒன். மக்கள் மீது சுமைளை ஏற்றி வஞ்சிக்கின்ற அரசில் நம்பர் ஒன் அரசாக இருக்கிறது. ஏழை எளிய மக்களின் மீது வரிகளை ஏற்றிய அரசு தமிழக அரசு. இதற்கெல்லாம் பதில் சொல்லி யாக வேண்டும். இந்த கேள்விகளுக்கெல்லாம் கோவையில் பதில் அண்ணாமலை மட்டுமே.

அண்ணாமலை எளிமையானவர், திறமையானவர், இளைஞர், தேசிய எண்ணம் கொண்டவர். கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடியவர். பெருந்தலைவர் காமராஜர், மூப்பனார் போன்றவர்களின் ஆசியோடு போட்டியிடக் கூடியவர். தேசிய ஜனநாயக கூட்டணியின் அத்தனை பேரின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர். உங்களின் பிரச்சனைகளை டெல்லியில் வாதாடி போராடி பெற்று தரக்கூடியவர் அண்ணாமலை. வரும் காலம் கோவைக்கு வசந்த காலம். கோவைக்கு விடிவு அண்ணாமலை வடிவில் இருக்கும். அண்ணாமலை வெற்றி 2026ல் அமையும் கூட்டணி ஆட்சியின் வெற்றி. திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்க வேண்டும். திராவிட இயக்கத்தில் நல்ல தலைவர்கள் மோடிக்கு ஆதரவு கொடுக்கின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளம் கோவையில் இருந்து துவங்குகிறது. வருங்கால வளர்ச்சியினை உறுதி செய்ய அண்ணாமலைக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் பேசினார்.

Tags

Next Story
குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி ஈரோட்டில் தொடக்கம்