அதிமுகவை இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக ஸ்டாலின் சித்தரிக்கிறார்: முதலமைச்சர்
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கொடிசியா மைதானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே தூதுவராக வானதி சீனிவாசன் செயல்படுவார் என தெரிவித்தார். 234 தொகுதிகளிலும் வென்றுவிடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். மு.க ஸ்டாலின் எத்தனை பகல் கனவு கண்டாலும் அதிமுகவை அழிக்க முடியாது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 100% வெற்றி பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் அதிமுக அரசு செய்த திட்டங்கள் குறித்து விளக்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட டெண்டரில் தான் முறைகேடு செய்ததாக ஆளுநரிடம் ஸ்டாலின் புகார் மனு அளித்துள்ளார். விஞ்ஞான மூளை கொண்ட பிரதமரை கூட ஸ்டாலின் விமர்சிக்கிறார்.
மக்களை மூளை சலவை செய்து வாக்குகளை பெற திமுக முயற்சித்து வருகிறது எனவும், மக்கள் தராசில் எடை போடுவது போல ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து இகழ்ந்து பேசும் தயாநிதி மாறன் போன்றவர்கள் இந்தத் தேர்தலுடன் இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர்,
திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் பெண்களை இகழ்ந்து பேசும் போது அதனை ஸ்டாலின் கண்டிக்கவில்லை என விமர்சித்தார். வாக்குகளுக்காக இஸ்லாமியர்களுக்கு அதிமுக எதிரான கட்சி என்பது போல சித்தரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்த அவர் அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளது எனவும் பெண்கள் பாதுகாப்பாக வாழ அதிமுக ஆட்சி தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu