தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் : எல்.முருகன்
Coimbatore News- செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன்
Coimbatore News, Coimbatore News Today- கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'நீலகிரி மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் கண்காணிப்பு கேமராக்களின் திரைகள் 20 நிமிடம் பழுதாகியுள்ளது. கட்சி நிர்வாகிகள் கண்காணிக்கும் கேமரா திரையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடை ஏற்பட்டதாக அலுவலர்கள் கூறுகின்றனர். இதனை தேர்தல் ஆணையம் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். எந்த காரணமும் சொல்லாமல், எந்த ஐயமும் ஏற்படாத வகையில் தொடர்ந்து 24 மணி நேரமும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு சரியான முறையில் கண்காணிக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், 'வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்களும் பல இடங்களில் விடுபட்டுள்ளது. குறிப்பாக பாஜகவை சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் கோவை மற்றும் நீலகிரி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளது. இது திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது. இ.வி.எம் இயந்திரத்தைப் பொருத்தவரை தேர்தல் ஆணையமும் அதன் அதிகாரிகளும் பலமுறை நன்றாக விளக்கம் அளித்து உள்ளார்கள்.
ஆனால் காங்கிரஸார் தொடர்ந்து அதை பற்றி பேசுவது அவர்களின் தோல்வி பயத்தால் தான். ராகுல் காந்தி அயோத்தி சென்று வழிபட மாட்டேன் என்று கூறியுள்ளார். அயோத்தியை பொருத்தவரை அனைத்து மக்களும் அங்கு வழிபாடு செய்து வருகிறார்கள். ராகுல் காந்தி இந்து மதத்தை வெறுக்கிறாரா? கடவுளை வெறுக்கிறாரா? என்பது குறித்து அவர்தான் விளக்க வேண்டும். கேரளா மாநிலத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது வாக்கு செலுத்த வந்த மக்கள் உயிரிழந்த விவகாரத்தை பொறுத்தவரை, தேர்தல் ஆணையம் தான் தற்போதுள்ள கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு உரிய வகை செயல்பட வேண்டும்' என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu