கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுக கூட்டம்
கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கோவை வரதராஜபுரம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, “இந்த தேர்தலில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிரணியினர் பிரிந்து உள்ளார்கள். ஒவ்வொரு நாளும் உதயசூரியன் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பாஜகவும், அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இரண்டும் ஒரே இயக்கங்கள் தான்.
தமிழினத்தை அழிக்க நினைக்கும் பாஜகவை ஒழிக்க வேண்டிய தேர்தல் இது. 4 ரெய்டு போட்டால் இந்த இயக்கங்கள் அசருமா? எதற்கும் அசராத இயக்கங்கள். செந்தில் பாலாஜி மீண்டும் வருவார். வெகு விரைவில் வருவார். எதிரணியினர் அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டும். நான் முருகன் கோவிலுக்கு செல்கிறேன். எனது தாத்தாவும், முதலமைச்சரும் கோவிலுக்கு போக வேண்டாம் என சொல்லவில்லை. நான் சகோதரர் வீட்டிற்கு சென்று நோன்பு கஞ்சி குடித்தால் உனக்கு என்ன? இது தேர்தல் அல்ல. போர். இனத்தை, தமிழ் மொழியை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிரான போர். ஒவ்வொருவரும் போராடினால் தான் மகத்தான வெற்றி கிடைக்கும். இது பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் மண். அடிமைகளையும், ஆதிக்கவாதிகளையும் ஒழிக்க வேண்டும். மிக பிரமாண்டமான வளர்ச்சி கோவைக்கு காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், “வருகின்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். கோவை பாஜக கோட்டை அல்ல. பாஜகவில் யார் போட்டியிட்டாலும், கோவையில் திமுகவின் கோட்டை என்பதால் திமுக போட்டியிடும் என முதலமைச்சர் கூறினார். பத்து ஆண்டு கால பாஜக ஆட்சியில் 70 சதவீத விசைத்தறிகள் முடங்கி விட்டது. சிறு,குறு தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளது. அதானி, அம்பானி போதும் என பாஜக அரசு நினைக்கிறது. நான் எப்போதும் இங்கே தான் இருப்பேன். மற்றவர்கள் ஜெயித்தால் அவர்களை பார்க்க முடியாது. பாஜக எந்த திட்டத்தையும் தரவில்லை. எதிரே நிற்பவர்கள் அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu