கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரர் மறைவிற்கு இந்து முன்னணி இரங்கல்

கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரர்   மறைவிற்கு இந்து முன்னணி இரங்கல்
X

சிவலிங்கேஸ்வர சுவாமிகள்

இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இறப்பிற்கு இந்து முன்னணி மாநில தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவை இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி இரங்கல் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சன்னிதானம் ஞான குரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் இன்று முக்தி அடைந்துள்ளார். ஆன்மீகத்திற்காகவும் இந்து சமுதாய ஒற்றுமைக்காகவும், அரும்பாடுபட்டவர் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள். இந்துக்களுக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக களத்தில் இறங்கி குரல் கொடுப்பவர்.தமிழகத்தில் நாத்திக சக்திகளால் கந்த சஷ்டி கவசம் அவமதிக்கப்பட்ட போது, இந்துக் கடவுள்களை யார் இழிவாக பேசினாலும் அவர்களின் நாக்கை கூட அறுக்க தயங்க தேவையில்லை என்று பொதுவெளியில் பகிரங்கமாக பேசியவர். ஆதீனங்கள் என்றாலே பூஜை புனஸ்காரங்களோடு தங்கள் பணியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இல்லாமல் இந்து தர்ம போராளியாக ஏற்றத்தாழ்வுகளை களைந்திடும் புரட்சியாளராக வாழ்ந்தவர் சிவலிங்கேஸ்வரர் ஸ்வாமிகள்.

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இந்து முன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேள்விப்பட்டவுடனே இந்து முன்னணி மாநில பொறுப்பாளர்களோடு தொடர்பு கொண்டு அன்று காலையிலேயே கோவை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து சசிகுமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மயானம் வரையில் வந்து அஞ்சலி செலுத்திய துறவி. தமிழகத்தில் பல கோவில்களின் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தியவர். கோவையில் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் பல்வேறு விதமான சேவைப் பணிகளை செய்தவர். 2019 ஆம் ஆண்டு பொங்கலூர் பகுதியில் இந்து முன்னணி பேரியக்கம் சார்பாக 1008 கோமாதா பூஜை ஒரு லட்சம் குடும்பங்கள் பங்குபெற்ற சோடஷ மகாலட்சுமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. அந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சாமிகள் இந்து முன்னணி பேரியக்கத்திற்கு உறுதுணையாக நின்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்து முன்னணி பேரியக்கத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்திடுவார். விடுதலைப் போராட்ட வீரர்களின் மீது தீரா பக்தி கொண்டவர். இளைய தலைமுறையினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாற்றை எடுத்துக் கூறுவதில் பேரார்வம் உடையவர். புதிதாக திறக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆதீனங்களில் இவரும் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளர். தேசியவாதி ஆன்மீகவாதி என்ற பல முகங்களைக் கொண்ட சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகளின் மறைவு இந்து சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் சீடர்கள் மற்றும் பக்தர்களுக்கு இந்துமுன்னணி ஆறுதல் கூறுகிறது. சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகளின் ஆன்மா எல்லாம் வல்ல ஈசனின் திருப்பாதங்களில் இளைப்பாற இந்துமுன்னணி வேண்டிக் கொள்கிறது/

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil