தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக இன்று சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ”சிறந்த மாநகராட்சி என்றால் அது கோவை மாநகராட்சி தான், எப்போதும் சுத்தமாக இருக்கும். இந்த பகுதியில் ஏராளமான மில்கள் மற்றும் என்டிசி மில்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றது. ஆலைகள் மூடப்பட்டதால் வேலைவாய்ப்பு கேள்வி குறியாகி இருக்கின்றது. இதற்கு யார் காரணம்? திமுகவினரும், அவர்களது பினாமிகளும் மூடப்பட்ட ஆலைகளை வாங்கி கட்டிடங்களாக மாற்றி வருகின்றனர்.
மோடி ஆட்சியில் ஜிஎஸ்டி வந்த பின் ஏராளமான மில்கள் மூடப்பட்டுள்ளன. தொழில்கள் முடங்கி இருக்கிறது. 300 சதவீத மின்கட்டண உயர்வினால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சிங்கை ராமசந்திரன் வெற்றி பெற்றால் மீண்டும் கோவையை தொழில் நகராமாக மாற்றுவார்.
சிங்காநல்லூர் பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகின்றது. குடிதண்ணீர் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிகனியாக தெரிகின்றது. எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி பாலம், சூர்யா நகர் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றது. அனைத்து சாலைகளுமே குண்டும் குழியுமாக இருக்கின்றது.
இந்த தேர்தலில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம். மத்திய அரசும், மாநில அரசும் கொடுத்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை இருக்கின்றது. டாஸ்மாக் கடைகள் பெருகி இருக்கின்றது. இந்த நிலைமாற வேண்டும் என்றால் சிங்கை ராமச்சந்திரனுக்கு வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu