கோவை நாடாளுமன்ற தொகுதிக்காக தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க.

கோவை நாடாளுமன்ற தொகுதிக்காக தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க.
X

கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான திமுக தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கையை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள திமுக தேர்தல் பணிமனையில் கோவைக்கான தேர்தல் அறிக்கையை, அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார். அதில் கோவையில் உள்ள நீர் நிலைகளில் மாசு ஏற்படுவது தடுக்கப்படும், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும், கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும், சிறுவாணி, பில்லூர் அணைகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும், குறுந்தொழில்களுக்கு புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும், ஜிஎஸ்டி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும், நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, “நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தேர்தல் அல்ல, இந்த போரில் மகத்தான வெற்றி பெறுவோம். திமுகவின் அற்புதமான களப்பணியால் கணபதி ராஜ்குமாரின் வெற்றி உறுதியாகி உள்ளது. பல்வேறு மக்களின் கருத்து கேட்டு திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. கோவைக்காக தனித்துவமான தேவைகள் மற்றும் மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளை வைத்து கோவைக்கு என தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம். திமுக தேர்தல் அறிக்கை மீது மக்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. 90 சதவீதம் வரை வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு திமுக அரசு. அமைய உள்ள ஒன்றிய அரசிலும் திமுகவின் பங்கு இருக்கும். ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் தெரிகின்றன. புதிய விடியல், புதிய உதயம் கோவைக்கு வர வேண்டும். அடுத்தகட்ட பிரமாண்டமான வளர்ச்சியை கொண்டு வர வேண்டும் என தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறோம். அடுத்தகட்ட பரிமாணத்திற்கான அடித்தளமிடுகிறோம். சிறு, குறு தொழில்களுக்கு ஜிஎஸ்டியால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்து 3500 நாட்களுக்கு மேலாகி விட்டது. இத்தனை நாட்களில் செய்யாததை 500 நாட்களில் செய்வோம் என்பது எந்த வகையில் நியாயம்? இப்படி சொல்ல பாஜகவிற்கு தகுதியில்லை. பாஜக சொன்னதை செய்ததாக சரித்திரம் இல்லை. வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக தோல்வி பயத்தில் பல புகார்கள் வரத்தான் செய்யும். மத்திய அரசின் நிதி எங்கே செல்கிறது என்பது தெரியவில்லை என அண்ணாமலை சொல்வது முட்டாள்தனம். அவர் சொல்வது பொய். அவர் தூங்கி கொண்டு இருக்கிறார். முழித்து கொள்ள வேண்டும். எங்களுக்கு போட்டி அதிமுக உடன் தான். அதனை ஊடகங்கள் மறைக்கின்றன. கருத்துக் கணிப்புகளை பார்த்தால் சிரிப்பு வருகிறது. எந்த கருத்துக் கணிப்பு உண்மை, எது பொய் என்பது தெரியவில்லை.

அனைத்து வளர்ச்சி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கி செயல்படுத்தும் ஒரே இயக்கம் திமுக தான். திமுக ஆட்சியில் தான் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி வருகிறது. புதிய மின் திட்டங்கள் வர உள்ளது. பெட்ரோல் விலையை 3 ரூபாய் உண்மையாக குறைத்தோம். இவர்களை போல விலையை ஏற்றிவிட்டு பொய்யாக குறைக்கவில்லை. பாஜக செய்வதை தான் எல்லோரும் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். நாடே அவர்களுக்கு எதிராக உள்ளது. காவிரி நதி நீர் பிரச்சனையைப் பற்றி பேச திமுக தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை. இவ்விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்ட இயக்கம் திமுக தான். கோவையில் திமுக வரலாறு காணாத வெற்றி பெறும். 100 சதவீத வெற்றி எங்களுக்குத் தான்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!