புற்றுநோய் பாதித்த குழந்தைகளை சந்தித்து உரையாடிய கிரிக்கெட் வீரர்கள்

புற்றுநோய் பாதித்த குழந்தைகளை சந்தித்து உரையாடிய கிரிக்கெட் வீரர்கள்
X

புற்றுநோய் பாதிப்புடன்  சிகிச்சை பெறும் குழந்தைகளை சந்தித்த மும்பை அணி கிரிக்கெட் வீரர்கள்.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் சந்தித்து பரிசுகள் வழங்கினார்.

புச்சி பாபு கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட மும்பை அணியின் வீரர்கள் கோவைக்கு வருகை தந்துள்ளனர். கோவையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் அவர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் ஒரு அங்கமான SRIOR - ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்று ஆராய்ச்சி மையத்தில் இலவச புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் 14 குழந்தைகளை சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் இலவச புற்றுநோய் சிகிச்சை வார்டில் உள்ளகுழந்தைகள், சூர்யகுமார் யாதவ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் குழுவை, சிவப்பு ரோஜாக்களை வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கிரிக்கெட் வீரர்கள் ஊக்கப்படுத்தி, முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்தனர். கிரிக்கெட் வீரர்கள் குழந்தைகளின் மினி கிரிக்கெட் பேட்களில் கையொப்பமிட்டு அவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சில குழந்தைகளிடம் சூர்யகுமார் யாதவ் உரையாடி அவர்களின் ஆர்வங்கள் குறித்து கேட்டறிந்தார். தங்களுக்கு பரிசளித்த வீரர்களுக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உருவப்படங்களை நினைவுப் பரிசுகளாக குழந்தைகள் வழங்கினர்.

இந்த குழந்தைகள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுமென சூர்யகுமார் யாதவ் மற்றும் குழுவினர் வாழ்த்தினர். இதையடுத்து, இந்த வார்டில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் சிகிச்சையின் காலம் குறித்து சூர்யகுமார் யாதவ் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆராய்ச்சி மையம் 2005 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், இதுவரை 1000க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இலவசமாக சிகிச்சை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக அந்த ஆராய்ச்சி மையத்தையும், மருத்துவர்களையும் சூர்யகுமார் யாதவ் பாராட்டினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!