கோவையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு: ஒரு வாரத்திற்கான டோக்கன் ஒரேநாளில் தீர்ந்தது

கோவையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு: ஒரு வாரத்திற்கான டோக்கன் ஒரேநாளில் தீர்ந்தது
X
கோவையில், ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழலில், ஒரு வாரத்துக்கான டோக்கன் ஒரே நாளில் விநியோக்கப்பட்டுள்ளது.

கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை, கோவையில் கடந்த 8 ம் தேதி துவங்கியது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு வயால் ரெம்டெசிவிர் ஆயிரத்து 568 ரூபாய்க்கும், 6 வயால் ரெம்டெசிவிர் 9 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்று, சிடி ஸ்கேன் சான்று, மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளி மற்றும் மருந்து வாங்க வருபவரின் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.

ரெம்டெசிவிர் விற்பனை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்குழுவினர் ஆவணங்களை பார்த்து பரிந்துரைப்பவர்களுக்கு மட்டுமே அம்மருந்து வழங்கப்படுகிறது. ரெம்டெசிவிர் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பு முடிவடைந்ததால், காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதில் வருகின்ற 15 ம் தேதி வரை ஒரு வாரத்திற்கான ரெம்டெசிவிர் டோக்கன் விநியோக்கப்பட்டுள்ளது. 16 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று மருந்து விற்பனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இனி 17 ம் தேதி மருந்து வழங்கப்படும் எனவும், இதற்கான டோக்கன் 16 ம் தேதி கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு கோவை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு ஒட்டப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் வழங்கப்படும் என்பதால், கல்லூரி முன்பு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் ஒரு வாரத்திற்கான மருந்துக்கான டோக்கன் முடிவடைந்து இருப்பதால், அவசர தேவையாக மருந்து தேவைப்படுவோர் செய்வதறியாத நிலையில் தவித்து வருகின்றனர். கூடுதல் மருந்துகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ரெம்டெசிவிர் விற்பனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!