அண்ணாமலை பிரச்சார முடிவில் கைவிரலை துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி
அண்ணாமலைக்காக கைவிரலை துண்டித்துக்கொண்ட துரை ராமலிங்கம்.
கோவை பாஜக வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவரும் அண்ணாமலை ஹோப்காலேஜ் அருகே உள்ள பாலன் நகர் பகுதியில் நேற்று மாலை பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அண்ணாமலை பிரச்சாரத்தை நிறைவு செய்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென கத்தியை எடுத்து தனது இடது ஆட்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்ட விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் முள்ளிப்பாடி அடுத்த ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியை சார்ந்த துரை ராமலிங்கம் என்பதும், கடந்த 2014ம் ஆண்டு பாஜக கட்சியில் சேர்ந்த அவர் கடலூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராக இருந்து வருவதும் தெரியவந்தது.
மேலும் கடந்த 10 நாட்களாக கோவைக்கு வந்து தங்கி பாஜக வேட்பாளரான அண்ணாமலைக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வந்த நிலையில், பிரச்சாரம் நிறைவு நேரத்தின் போது அண்ணாமலை தோல்வி அடைந்து விடுவார் என ஒருவர் கூறியதால், கோபமடைந்த அவர் அண்ணாமலை வெற்றி பெறுவார் என தன்னுடைய இடது ஆட்காட்டி விரலை துண்டித்துக் கொண்டது தெரியவந்தது. பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெற கட்சி நிர்வாகி ஒருவர் விரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து துரை ராமலிங்கம் கூறுகையில், “கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலைக்காக பிரச்சாரம் செய்தேன். இந்தத் தேர்தலில் கோவையில் அண்ணாமலைக்காக பிரச்சாரம் செய்தேன். அவர் நல்ல தலைவர் என்பதால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. நேற்று பிரச்சாரம் நிறைவடைந்த போது அண்ணாமலை தோற்றுவிடுவார் என ஒருவர் கூறியதால், கோபத்தில் விரலை துண்டித்துக் கொண்டேன். அண்ணாமலை வெற்றி பெறுவது உறுதி. தமிழகம் முழுவதும் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மீண்டும் பிரதமராக மோடி வருவார்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu