’அண்ணாமலைக்கு முதல்வர் கனவே இல்லை’ - அண்ணாமலை பேட்டி
அண்ணாமலை
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தர். அப்போது பேசிய அவர், ”பிரதமர் மோடி தமிழக மண்ணில் இருந்து புறப்பட்டு அயோத்தி செல்கிறார். அவரை சாதுக்கள், சந்நாசிகள் வாழ்த்தி வழியனுப்ப தயாராக இருக்கிறார்கள். உத்திர பிரதேசம் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடுகிறது. ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். எல்லோரும் கொண்டாடும் தெய்வம் ராமர்.
தமிழகத்தில் இருந்து மிக முக்கியமான மனிதர்கள், ஆளுமைகள் அயோத்தி செல்கிறார்கள். கூட்டம் குறைந்த பிறகு நாங்கள் அயோத்தி செல்வோம். பாபர் மசூதியை இடித்ததாக உதயநிதி பேச தகுதி இல்லை. சேகர்பாபு ராமாயண புத்தகத்தை முதலமைச்சருக்கு பரிசாக கொடுத்தார். படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது போல, திமுகவினர் ஆட்சிக்கு வந்ததும் எத்தனை கோவில்களை இடித்தார்கள்? மக்கள் கொந்தளிப்பால் இடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார்கள். ராமர் கோவில் கட்ட பாராளுமன்றத்தில் சிறப்பு சட்டம் கொண்டு வந்து கட்டவில்லை. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி கட்டப்பட்டுள்ளது. உதயநிதி தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கண்ணாடி முன் நின்று பார்க்க வேண்டும்.
ஆளுநர் ரங்கசாமி கோவிலில் சுத்தம் செய்தார். பொது சேவையில் எப்படி ஈடுபட வேண்டுமென மக்களுக்கு எடுத்துக்காட்டாக ஆளுநர் விளங்குகிறார். அவர்களது கருத்து ஏற்கவில்லை என்றால் குற்றவாளியாக பார்க்கிறார்கள். ஆளுநர் தனிப்பட்ட முறையில் அரசியலமைப்பு சட்டப்படி வேலை பார்க்கிறார். மாநில அரசு சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட ஆளுநர் லப்பர் ஸ்டாம்ப் அல்ல. ஆளுநர் தரம் தாழ்ந்து போகவில்லை. ஆளுநர் வரம்பு மீறியதாக உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. ஆட்சியை எப்படி முன்னேற்றுவது என முதலமைச்சர் யோசிக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஆளுநரை வம்பிற்கு இழுப்பது அழகல்ல. திமுகவின் 2 ஜி ஊழல் குறித்து 9 பைல் ரிலீஸ் செய்வோம். 2 ஜி சிபிஐ விசாரணை கண் துடைப்பிற்காக நடத்தப்பட்ட நாடகம். தன்னை நிராபராதி என சொல்லும் ஆ.ராசா மற்றும் டி.ஆர். பாலு இந்த டேப்பிற்கு பதில் சொல்ல வேண்டும்.
அண்ணாமலைக்கு முதல்வர் கனவே இல்லை. அவர்கள் கட்சி மாதிரி ஒருவரை தூக்கி பிடித்து இவர் தான் என காட்ட மாட்டோம். அண்ணாமலை கட்சியை வளர்ப்பது, நிறைய தலைவர்கள் உருவாக்குவது, ஏற்கனவே உள்ள தலைவர்கள் உடன் இணைந்து கட்சியை பலப்படுத்துவது தான் அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட வேலை. முதல்வர் கனவில் யாரும் இல்லை. துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேசிய கருத்து அவரது கருத்து. பதவி ஆசை இருப்பவர்கள் பாஜகவை குற்றம் சுமத்தும் அருகதை இல்லை. பாஜகவில் யாரும் பதவி ஆசையில் இல்லை. கொள்கைக்காக, மாற்றத்திற்காக, புதிய அரசியலை கொடுக்க பாஜகவில் வேலை செய்கிறார்கள். முதலமைச்சர் நாற்காலிக்கு பொருத்தமான, திறமையான நிறைய பேர் பாஜகவில் இருக்கிறார்கள். அந்த கட்சியை அப்படி சொல்ல சொல்லுங்கள். இவரை தவிர முதலமைச்சர் நாற்காலிக்கு பொருத்தமானவர் என வேறு ஒருவரை சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.
பாஜகவில் ஒரு தலைவர் கிடையாது. 15, 20 தலைவர்கள் இருக்கிறார்கள். இன்னும் நிறைய தலைவர்கள் உருவாவர்கள். மற்ற கட்சிகளை போல ஒரே ஒரு தலைவருக்காக முழு கட்சியும் வேலை செய்ய வேண்டுமென்ற நிர்பந்தம் பாஜகவினருக்கு இல்லை. அந்த கட்சியில் ஒருவரை தவிர வேறு ஒருவரை பொருத்தமானவர் இருக்கிறார்கள் என சொல்ல முடியுமா? மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒரு கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சியில் முதலமைச்சர் நாற்காலிக்கு ஒருவர் தான் இருக்கிறார்களா? இரண்டாவது, மூன்றாவது இல்லையா? ஒருவருக்கு விளம்பரம் செய்தாலும் இயற்கை ஏற்றுக் கொள்ள வேண்டும். பாஜகவில் உள்ள தலைவர்கள் யாரும் செயற்கையாக வரவில்லை. மக்களோடு மக்களாக உழைத்து படிப்படியாக மேலே வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu