மல்யுத்த வீரர்கள் போராட்டம்: கோவை ரயில் நிலையம் முற்றுகை

மல்யுத்த வீரர்கள் போராட்டம்: கோவை ரயில் நிலையம் முற்றுகை
X

மல்யுத்த வீரர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்

மல்யுத்த வீரர்கள் போராட்டதிற்கு ஆதரவாக கோவையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட எஸ்.எப்.ஐ., டி.ஒய்.எப்.ஐ சங்கத்தினர்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பா.ஜனதா எம்.பி. பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் கோவையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர்.

ஆனால் அவர்கள் உள்ளே நுழைய முயன்றதால் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜ.க எம்பி பிரிஜ் பூஷனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். அவர்கள் பா.ஜ.க எம்.பி. பிரிஜ்பூஷனை கைது செய்ய கோரியும், அவர் பதவி விலக கோரியும் கோஷம் எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!