பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாட புத்தகம் வினியோகம்
பாடபுத்தகங்கள் (கோப்பு படம்).
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனை மலை, சுல்தான்பேட்டை, மதுக்கரை உள்ளிட்ட தாலுகாக்களில் அரசு மற்றும் அரசு உதவிபெற்ற பள்ளிக்கூடங்கள் உள்ளன.
இங்கு கடந்த மாதம் 23-ந்தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடந்தது. அதன்பிறகு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள், நகராட்சி, சுயநிதி பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நல பள்ளிக்கூடங்கள் உள்ளன. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, அனைத்து பாடப்புத்தகங்களுமான புதிய பாடப்புத்தகங்கள் வந்து சேர்ந்து உள்ளன. அவை கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
அதேபோல ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்க- நடுநிலைப் பள்ளிக்கூடங்களில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், அந்தந்த ஒன்றிய வட்டார கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளன. பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu