கோவையில் இரண்டு இடங்களில் பிடிபட்ட மலைப்பாம்புகள்
பிடிபட்ட மலைப்பாம்பு
கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் செங்கல் சூளைக்கு அருகே, பத்து அடி மதிக்கத்தக்க மலைப் பாம்பு ஒன்று, அந்தப் பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சுருண்டு படுத்திருந்துள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த சிலர் பார்த்தவுடன் பயந்து இருக்கின்றனர்.
இது குறித்து உடனடியாக வனத்துறைக்கும், பாம்பு பிடி வீரருக்கும் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் அலைபேசியில் தகவல் தந்தனர். இதனைத் தொடர்ந்து வன பணியாளர்களும், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரரான விக்னேஷ் குமாரும் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த மலைப் பாம்புவை வனத் துறையுடன் இணைந்து பாம்பு பிடி உபகரணங்கள் உதவியுடன், பாம்புபிடி வீரர் விக்னேஷ்குமார் பத்திரமாக பிடித்து பைக்குள் அடைத்தார். பின்னர் அந்த மலை பாம்பு மாங்கரை வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.
இதேபோல பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியில் விவசாயி சிவராமன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடு, மாடு. கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இன்று வழக்கம் போல கோழிகளை திறந்து விடுவதற்காக கோழி கூண்டுக்கு அருகே செல்லும் போது, அங்கே மலைப் பாம்பு ஒன்று கோழியை விழுங்கியவாறு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் கோழி கூண்டில் மறைந்திருந்த சுமார் 11 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை நீண்ட நேரம் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக பிடித்தனர். பின்னர் ஆழியார் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அந்த மலைபாம்பு விடுவிக்கப்பட்டது.
தற்போது மழைக்காலம் என்பதால் புதர் பகுதிகளில் பாம்புகள் முகாமிடும் என்பதனால், பொதுமக்கள் தாங்கள் வசிக்கக் கூடிய பகுதிகளில் புதர் மண்டி கிடக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம் எனவும், பொதுமக்கள் தங்களை சுற்றி உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu