பொள்ளாச்சி - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து: பயணிகள் அதிருப்தி

பொள்ளாச்சி ரயில் நிலையம்.
கோவை - திண்டுக்கல் இடையேயான அகல ரயில் பாதை பணிகளுக்கு பிறகு கடந்த 2015ம் ஆண்டு முதல் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு அந்த ரயில் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ரயில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதற்கிடையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பை காரணம் காட்டி திருச்செந்தூர் ரயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அந்த அறிவிப்பில் வருகிற 15ம் தேதி முதல் திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சிக்கும், 16ம் தேதி முதல் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கும் ரயில் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் 15ம் தேதி முதல் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்ட தேதி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ரயில் பயணிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu