பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
X

கைது செய்யப்பட அருண்குமார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையானது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், தற்போது வரை 9 பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு அண்மையில் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க, கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அருண்குமார் என்ற நபரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார், இவ்வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சதீஷ்குமிரின் தொழில் பார்ட்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!