நீர் திறப்பு தாமதம்: முதல் போக நெல் சாகுபடி பாதிக்கும் அபாயம்
ஆழியார் அணை
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஒப்பந்தப்படி அணையில் இருந்து கேரளாவுக்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் பழைய ஆயக்கட்டில் அரியாபுரம், பெரியணை, வடக்கலூர், காரப்பட்டி ஆகிய 5 கால்வாய்கள் மூலம் 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அந்த பகுதியில் நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆண்டுதோறும் மே மாதம் 16-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு மே மாதம் 16-ம் தேதியை கடந்தும் இன்னும் தண்ணீர் திறக்கவில்லை. தண்ணீர் திறப்பு தாமதம் ஆவதால் முதல் போக நெல் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து பழைய ஆயக்கட்டு விவசாயிகள் சங்க செயலாளர் கூறியதாவது:-
பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு சட்டப்படி ஆண்டுதோறும் மே மாதம் 16-ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆண்டுகள் மட்டுமே குறிப்பிட்டப்படி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு மே மாதம் 16-ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கிடையில் நீர்வள, நில வள திட்ட பணிகள் நடைபெறுவதால் அரசாணை பெற்று வருகிற 1-ம் தேதி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அணையில் போதிய நீர் இருப்பு இல்லை. எனவே மழை பெய்தால் தான் தண்ணீர் வழங்க முடியும் என்கின்றனர்.
கடந்த ஆண்டு சட்டப்படி மே 16-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் முதல் போக நெல் விளைச்சல் அதிகரித்து உள்ளது. தற்போது தாமதமாக தண்ணீர் திறந்தால், நெல் அறுவடைக்கு வரும் போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி விடும்.
இதனால் பயிர்கள் சேதமாகி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படக்கூடும். இது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு வருகிற 1-ம் தேதி தண்ணீர் திறப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில் ஆழியாறு அணையில் உள்ள தற்போதைய நீர் இருப்பின்படி பாசனத்திற்கு 15 நாட்கள் தண்ணீர் வழங்க கூடிய சூழ்நிலை உள்ளது.
மழை இல்லாததால் அணைக்கு வினாடிக்கு 18 அடியும், அணையில் இருந்து குடிநீருக்கு வினாடிக்கு 65 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
எனவே மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் விவசாய பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu