பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதானவர்களுக்கு கூடுதல் குற்றபத்திரிக்கை நகல் வழங்கல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதானவர்களுக்கு கூடுதல் குற்றபத்திரிக்கை நகல் வழங்கல்
X

கோவை நீதிமன்றம் (பைல் படம்)

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்தனர்.

கடந்த 2019 ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வந்த நிலையில் 2019ம் ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் கடந்தாண்டு ஜனவரி மாதம் பொள்ளாச்சியை சேர்ந்த அருளானந்தம், ஹேரென்பால், பாபு ஆகிய 3 பேரை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட 9 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியை சேர்ந்த அருண் குமார் என்ற நபர் 9 வது நபராக கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 9 பேருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகை நகலானது வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையை வரும் 29 ம் தேதிக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார். 29ம் தேதிக்கு பின்னர் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்