பொள்ளாச்சியில் வரும் 27-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
பைல் படம்
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் வரும் 27-ம் தேதி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்காக மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், செயல்படும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை கிண்டியில் பிப்ரவரி 22, 2019 அன்று தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, இயக்குநர் இம்மையத்தின் இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலராவார். வேலைநாடும் இளைஞர்கள் தங்களுக்கு உகந்த தொழில்நெறியை தெரிவு செய்வதற்கு உறுதுணையாக விளங்குவதே இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக இத்தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உள அளவை சோதனைகள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், வேலைவாய்ப்பு முகாம்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனைகள் வழங்குவது என்பது போன்ற சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வரும் 27-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் உற்பத்திதுறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், தகவல் தொழில்நுட்ப துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர்.
மேலும், இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகள் நல்கும் நிறுவனங்களும் அதிக அளவில் கலந்துகொள்ள உள்ளன. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழில்கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம்.
இம்முகாமிற்கு வருவோர் தங்களது சுயவிவரம், கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை. மேலும், இந்த முகாமின் சிறப்பம்சமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவுகளும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கான பதிவுகளும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவுகளும் இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.
மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலைதேடுவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login-ல் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இம்முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு 9790199681 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu