கோடநாடு வழக்கு :திருச்சி விரைந்த குஜராத் தடவியல் குழு
கோடநாடு எஸ்டேட்
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை நடைபெற்றது.
காவல்துறையினர், இதில் தொடர்புடையதாக கருதப்படும் சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த, 10 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தற்போது, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் மறுவிசாரணை செய்து வருகின்றனர். இதற்காக, 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ளது.
அவர்கள் கொடுக்கும் தகவலின்படி, பலருக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி., காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானை, கடந்த ஜன., மாதம், 11ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக, காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (1ம் தேதி) ஆஜராகும் படி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் மதியம் 2:00 மணிக்கு சயான் ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி., காவல்துறையினர் சுமார், 8 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற, 2017ம் ஆண்டு அந்த பகுதியில் செயல்பாட்டில் இருந்த, 60 மொபைல் போன் எண்கள், 19 மொபைல் போன் டவர் இடங்களின் விவரங்களை, காவல்துறையினர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தின் உதவியுடன் சேகரிக்க முயன்றனர்.
சம்பவம் நடந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதால், திருச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தான், தகவல்களை சேகரிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து, அந்த பதிவுகளை சேகரித்து தரும்படி, குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்கழத்திற்கு, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சி.பி.சி.ஐ.டி., காவல்துறையினர், கடிதம் அனுப்பினர்.
இதை தொடர்ந்து, குஜராத் தேசிய தடயவியல் குழு நிபுணர்கள் இருவர், நேற்று திருச்சி விரைந்தனர். அவர்கள் திருச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu