எனது தந்தையே என் வாழ்க்கைக்கு முன்மாதிரி: உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன்
பாராட்டு விழாவில் உரையாற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன்
பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா பொள்ளாச்சியில் நடந்தது. வக்கீல் சங்க தலைவர் துரை வரவேற்றார்.
விழாவில் நீதிபதி விஸ்வநாதன் கூறுகையில், பொள்ளாச்சியில் சிறு வயதில் படித்த அனுபவம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. மேல் படிப்புக்காக வெளியூருக்கு சென்றாலும் மனதில் இருந்து பொள்ளாச்சியை நீக்க முடியாது.
தந்தை எனக்கு கல்வியை கொடுத்ததால் நல்ல நிலைக்கு வந்துள்ளேன். ஒழுக்கத்தை எனது பெற்றோரிடம் இருந்தே கற்றுக் கொண்டேன். உலகத்தில் உள்ள அனைத்து தாய்களும் தனது மகன் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பர். ஆனால் அவர்களது உழைப்பு, அர்ப்பணிப்பு வெளியில் யாருக்கும் தெரிவதில்லை.
எனது தந்தையே என் வாழ்க்கைகயிலும், தொழிலும் முன்மாதிரியாக உள்ளார். தற்போதுள்ள வக்கீல்கள் கடுமையாக உழையுங்கள். நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களது வழக்கை செவ்வனே செய்ய முயற்சிக்க வேண்டும். நமக்கு கடவுள் ஒரு பாதை வகுத்துள்ளார். அந்த பாதையில் கடமையை செவ்வனே செய்தால் அதற்கான பலன் கிடைக்கும்.
எனது நீதிபதி பதவியை பொறுப்பாக பார்க்க விரும்புகிறேன். இதற்கு கடின உழைப்பு தேவையாகும். இந்த கண்ணோட்டத்தில் இருந்தால் தான், மக்களுக்கு நீதியை வழங்க முடியும். நான் ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் இந்த பொறுப்பில் உள்ளவரை நன்றாக பணியாற்ற கடவுள் மற்றும் பெரியோரின் ஆசி தேவை. என்று கூறினார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் இறந்தோருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து வக்கீல்கள் சங்கம் சார்பில், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பொள்ளாச்சி நீதிபதிகள், வக்கீல்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu