தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் பாதுகாப்பு: மாநகர காவல் ஆணையர்
ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மருத்துவ செடிகளை பார்வையிடும் மாநகர காவல் ஆணையர்
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில், ஆயுர்வேத மருந்து குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மருத்துவ செடிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி வாரத்திற்கு ஒரு முறை காவலர்களுக்கு விடுமுறை அளித்து வருகிறோம்.
தீபாவளி போன்ற முக்கியமான நேரங்களில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், கடைத்தெருக்களில் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் ஒரு சில நாட்களில் மட்டும் சில மணி நேரம் காவலர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க இருக்க வாய்ப்புள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில் காவலர்களுக்கு ஓய்வு வழங்கப்படும்.
மேலும் ஒப்பணக்கார வீதியில், கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீன நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளியை முன்னிட்டு கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடக்கும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தீபாவளி விற்பனைக்காக கடை உரிமையாளர்கள் இரவில் கூடுதல் நேரம் திறந்து வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதற்கான பாதுகாப்பு வழங்கப்படும் என்று கடை உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளோம்.
ஓப்பணக்கார வீதியை சுற்றிலும் அதிநவீன முகத்தை துல்லியமாக கண்டறியும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மெட்டா டேட்டா என்ற புதிய தொழில்நுட்பத்துடனான 110 காமிராக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பொருப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக கூடுதலாக 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இந்த காமிராக்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.இந்த நவீன காமிராக்கள் குற்றங்களை தடுப்பதற்கும் தீபாவளி சமயத்தில் பாதுகாப்பாக பொதுமக்கள் தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கும் வசதியாக இருக்கும்.
இதுதவிர மக்கள் கூடும் இடஙகளில் கூட்டத்தை கண்காணிப்பதற்காக ஒப்பணக்கார வீதி, கிராஸ் கட் வீதி உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாநகரில் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்களில் அடிக்கடி ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu