காட்டுத்தீயை கட்டுப்படுத்த நவீன ட்ரோன்! வனத்துறை நடவடிக்கை
கோடை காலங்களில் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். இதைத்தடுக்க தீத்தடுப்பு கோடுகள் ஏற்படுத்தப்படும். அதையும் மீறி காட்டுத்தீ ஏற்படும் போது அதைத் தடுக்க பச்சைக்கிளைகள் வெட்டிப் போடப்படும்.
காட்டுத்தீ ஏற்படும் போது அதை அணைப்பதற்கான உபகரணங்களுடன் மலையில் ஏறுவது வனத்துறை முன்கள பணியாளர்களுக்கு சவாலான காரியமாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு, கோவை வனக்கோட்டத்தின் போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில், 300 வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும் தீயை அணைக்க இயலவில்லை. இதையடுத்து, சூலுாரில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்திய விமானப்படையின் எம்.ஐ., 17 வி5 ரக ஹெலிகாப்டர் வந்து தீயை அணைத்தது.
இந்த சிக்கலை தீர்க்க வனத்துறை பல்வேறு நவீன உபகரணங்களை வாங்கியுள்ளது. இதில், வனத்துறையினர் செல்ல முடியாத இடங்களுக்கு சென்று வனத்தீயை அணைக்கவும், தீத்தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக, ரூ.7.5 லட்சம் மதிப்பிலான டிரோன் ஒன்றை வாங்கியுள்ளது.
இது குறித்து மாவட்ட வனஅலுவலர் கூறுகையில், இந்த டிரோன், 10 கிலோ வரையிலான எடையை துாக்கிச் செல்லும். இதைப்பயன்படுத்தி ஆட்கள் செல்ல முடியாத இடங்களில் ஏற்படும் தீயை அணைக்க முடியும்.
மேலும், உணவு, தண்ணீர் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. நான்கு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த டிரோனை இயக்க முடியும். கோவை வனத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள வனத்துறையினருக்கு ரூ.1.7 கோடி மதிப்பிலான தீத்தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தீத்தடுப்பு ஆடைகள், தீத்தடுப்பு கண்ணாடிகள், ஷூக்கள், ஏர் புளோயர்கள், கையடக்கமான தீ அணைப்பான்கள், தலைக்கவசம் உள்ளிட்டவை அடங்கும். தீத்தடுப்பு உடைகள் வனத்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர கோவை வனக்கோட்டத்துக்கு, 28 தீயணைக்கும் ரசாயன பந்துகள் வாங்கப்பட்டுள்ளன. ஆட்கள் செல்ல முடியாத பகுதியில் காட்டுத்தீ ஏற்படும் போது இந்த பந்துகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, 30 சிறப்பு பைகள் வாங்கப்பட்டுள்ளன. இதில், 10 லிட்டர் நீரை எடுத்து செல்லும் வசதி உள்ளது. முதுகில் இருக்கும் போது இப்பையில் உள்ள நீரை ஊழியர்கள் டியூப் வாயிலாக குடிக்க வசதி உள்ளது. தீத்தடுப்பு பணியில், 30 தீத்தடுப்பு கண்காணிப்பாளர்கள், 106 வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu