வால்பாறையில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் உடலுக்கு அமைச்சர் முத்துசாமி அஞ்சலி
நீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறும் அமைச்சர் முத்துசாமி
கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 10 பேர் 5 மோட்டார் சைக்கிள்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர். சோலையாறு நல்லகாத்து சுங்கம் என்ற இடத்துக்கு சென்ற அவர்கள், சோலையார் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது வினித் என்ற மாணவர் ஆற்றில் உள்ள சுழலில் சிக்கி கொண்டு சத்தம் எழுப்பினார்.
அவரை காப்பாற்றுவதற்காக மாணவர்கள் தனுஷ், சரத், நபில், அஜய் ஆகியோர் ஆற்றுக்குள் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களும் சுழலில் சிக்கி வெளியில் வரமுடியாமல் தண்ணீரில் மூழ்கினர். இதை கரையில் இருந்த சக நண்பர்கள் பார்த்து கூக்குரல் எழுப்பவே அருகே வசித்து வரும் பொதுமக்கள் ஓடி வந்தனர். மேலும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வினித், தனுஷ், அஜய், சரத், நபில் ஆகிய ஐந்து பேரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்களது உடலை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அவர்களது உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து பதறியடித்துக் கொண்டு அவர்கள் மருத்துவமனைக்கு வந்து, தங்கள் மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களில் வினித், தனுஷ், அஜய் ஆகியோர் கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தை சேர்ந்தவர்கள். இதில் வினித்தும், தனுஷும் அண்ணன் தம்பிகள் ஆவர்.
ஒரே பகுதியை சேர்ந்த மூன்று மாணவர்கள் சுற்றுலா சென்ற இடத்தில் இறந்ததால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் முத்துசாமி அங்கு இறந்த 5 கல்லூரி மாணவர்களின் உடலுக்கும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து கிணத்துக்கடவு மணிகண்டபுரத்திற்கு சென்ற அவர் வினித், தனுஷ் ஆகியோரின் பெற்றோர்களான ராமகிருஷ்ணன்- கவிதா, அஜயின் பெற்றோர் ரவி-தெய்வானை ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu