அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை: உயிர் தப்பிய ஊழியர்கள்
இடிந்து விழுந்த மேற்கூரை
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கடந்த 1962 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த 62 ஆண்டுகளாக உள்ள இந்த கட்டிடத்தில் பல இடங்களில் விரிசல்கள் உள்ளன.
இந்த நிலையில் இன்று கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து சிமெண்ட் காரை திடீரென பெயர்ந்து விழுந்தது. சப்தத்துடன் விழுந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும், அருகில் இருந்த அறையில் இருந்தும் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர்.
நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அறிந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அம்பாள் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய பொறியாளர்கள் கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டன.
மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கூறும் போது, கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பலமுறை அரசுக்கு திட்ட வரைவு அனுப்பி உள்ளோம். எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெரும் விபரீதம் ஏற்படும் முன்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மேல் கூரை திடீரென பெயர்ந்து விழுந்த நிலையில் நல்வாய்ப்பாக அலுவலகத்தில் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu