கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் பெண் காட்டு யானை உயிரிழப்பு

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் பெண் காட்டு யானை உயிரிழப்பு
X

சிறுமுகை வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை.

சிறுமுகை வனச்சரகத்தில் பெண் காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ளது. பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள இப்பகுதியில், காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

மேலும் யானைகளின் வலசை பாதையில் சிறுமுகை வனச்சரகம் முக்கிய வழித்தடமாக உள்ளதால், யானைகள் நடமாட்டம் எப்போதும் அதிகரித்து காணப்படும். தற்போது யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால், சிறுமுகை வனச்சரத்திற்கு உட்பட்ட பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் சிறுமுகை கூத்தாமண்டி அடுத்த மூலையூர் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மூலையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள் யானை உயிரிழப்பு குறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

அதில் உயிரிழந்தது பெண் காட்டு யானை என்பதும், அதற்கு 5 வயது இருக்கும் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து யானையின் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் முக்கிய உடல் பாகங்கள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. உடல் நலக் குறைவால் இந்த யானை உயிரிழந்திருக்கலாம் எனவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உயிரிழப்பிற்கான முழு காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!