கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட இளைஞர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம், கஞ்சா உடன் போலீசார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவல் துறையினர் பெரியநாயக்கன்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் வந்த வட மாநில இளைஞன் போலீசாரை கண்டதும், இருசக்கர வாகனத்தை திருப்பிக் கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதையடுத்து போலீசார் அவனை விரட்டிப் பிடித்து சோதனை செய்த போது, வைத்திருந்த மூட்டையில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மண்டூஸ் குமார் என்பது தெரியவந்தது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருப்பதும், கடந்த 2 வருடங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதுடன் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து 5 கிலோ கஞ்சா, கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு செல்போன் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu