குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன ஓட்டிகள் அவதி

குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்:  வாகன ஓட்டிகள் அவதி
X

மேம்பாலத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி

பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

கோடை காலம் நிலவி வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் பெரியநாய்க்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக பெரியநாய்க்கன்பாளையம் மேம்பாலத்தில் குளம் போல தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், கவுண்டம்பாளையம், துடியலூர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டது. இந்த பாலங்கள் அனைத்தும் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதில் பெரியநாயக்கன்பாளையத்தில் 115 கோடி ரூபாய் மதிப்பில் எல்.எம்.டபிள்யூ பிரிவு முதல் வீரபாண்டி பிரிவு வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது. அதில் பாலத்தின் முடிவில் உள்ள குடியிருப்புகள் அகற்றப்படாமல் உள்ளதால் அங்கு சாலை குறுகி அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. மேலும் முறையான திட்டமிடல் இல்லாமல் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளதாகவும், வடிகால் வசதிகள் செய்யப்படாமல் கட்டப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம்பட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கோடை மழை காரணமாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பாலத்தின் மீது மழை நீர் குளம் போல தேங்கி இருக்கிறது. மழை நீர் வெளியேற முறையான வசதி செய்யவில்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.

மேம்பாலத்தில் குளம் போல காட்சி அளிக்கும் மழை நீர் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!