மேட்டுப்பாளையம் – உதகை ரயில் இன்றும் ரத்து
தண்டவாள சீரமைப்புப்பணிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள்
கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு மலை ரயில் நீலகிரி மாவட்டம் உதகைக்கு இயக்கப்பட்டு வருகிறது. அடர்ந்த வனப் பகுதி வழியாக செல்லும் இந்த ரயிலில் பயணம் செய்யும் போது ரம்மியமான இயற்கைக் காட்சிகள், வன விலங்குகளைக் கண்டு ரசித்தபடி பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இடியுடன் கனமழை பெய்தது. இதனால் கல்லாறு- ஹில்குரோவ்- அடர்லி இடையே மலை ரயில் பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் பெரிய பாறைகள் விழுந்தன. இதோடு பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. இதையடுத்து மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவையை 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தெற்கு ரயில்வே நிர்வாகம் ரத்து செய்திருந்தது.
இதனிடையே ரயில்வே பாது காப்பு முதுநிலை ஆணையர் கைலேஷ் குமார், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கௌதம் சீனிவாச ராவ், துணை முதுநிலை கோட்ட மேலாளர் சிவலிங்கம் ஆகியோர் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்திருந்தனர்.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் கல்லாறு-ஹில்குரோவ்- அடர்லி மலைப் பாதைக்குச் சென்றனர். தொடர்ந்து அப்பகுதிகளில் ரயில் இயக்கப்பட்டு தண்டவாளத்தின் உறுதிதன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் மழையால் தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் மலை ரயில் ஞாயிற்றுக்கிழமையும் (டிசம்பர் 18) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu