பிரதமரின் கனவை முன்னெடுத்து செல்ல மத்திய அமைச்சர் முருகன் வேண்டுகோள்
விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் 'ஒருங்கிணைந்த விளையாட்டு விழா' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
இந்த ஒருங்கிணைந்த விளையாட்டு விழா நிகழ்ச்சியில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், பார்வை திறன் குறைபாடு உள்ள குழந்தைகள், கேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தைகள், உடல் இயக்க குறைபாடு உள்ள குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளும் அவர்களுடன் பயிலக்கூடிய மாற்றுத்திறனாளி அல்லாத குழந்தைகளும் என சுமார் 900 குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இணைந்து உடற்பயிற்சிகளை செய்தனர்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கற்றல் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தெரப்பி சிகிச்சை முறைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் அமைச்சர் பார்வையிட்டார். இந்நிகழ்வினை அடுத்து, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள United institute of technology கல்லூரியில் நடைபெற்ற 'Ideathon-2024' எனும் கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அங்கு மாணவர்கள் மத்தியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:-
'Swadeshi Jagran Manch அமைப்பின் சார்பில் 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்ளும் தொழில்நுட்ப கருத்தரங்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கமான சுயசார்பு பாரதத்தை நோக்கி பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு முதல் அனைத்து துறைகளையும் தன்னிறைவு பெறவைத்து முன்னேற்றி வருகிறார். தன்னிறைவு பெற்ற பாரதத்திற்கான மாணவர்களை உருவாக்கும் வகையில் தொழில் துறை விரும்பும் விதமாகவும், பாரதத்தின் கலாச்சாரத்தை பாதுகாக்கும் விதமாகவும் புதிய கல்விக் கொள்கை 2020 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
இதில் தாய் மொழி கல்வி, தொழில் நுட்ப அறிவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்காகவே மத்திய அரசு சார்பில் அட்டல் இன்குபேஷன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிக இளைஞர்களைக் கொண்ட நாடான இந்தியாவில் பட்டை தீட்டப்பட்ட திறன்மிக்க இளைஞர்களை உருவாக்கும் விதமாக தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு சான்றாக முன்பு நாம் ராணுவ தளவாட உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தோம். இப்போது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம்.
விண்வெளி ஆராய்ச்சியில் முன்னோடியாக இந்தியா திகழ்கிறது. வெறும் 653 கோடி ரூபாய் செலவில் சந்திரயான் விண்கலத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இதில் பெண் விஞ்ஞானிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. இதேபோல் கோவிட் பெருந்தொற்றுக்கு உள்நாட்டிலேயே தடுப்பூசியை தயாரித்து மற்ற நாடுகளுக்கும் இலவசமாக வழங்கினோம். விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் கைவினை கலைஞர்களை ஊக்குவித்து சுய சார்பு இந்தியாவை உருவாக்கும் முனைப்பில் பாரத பிரதமர் செயல்பட்டு வருகிறார். இளைஞர்களை தொழில் முனைவோராக ஆக்கும் விதமாக ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் ஆகியவை துவங்கப்பட்டுள்ளன.
2014 ஆண்டுக்கு முன்பு வெறும் 400 ஸ்டார்ட் அப்கள் மட்டுமே இருந்தன. இப்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்புகள் உள்ளன. இதில் இளைஞர்கள் தலைமை பொறுப்பில் உள்ளனர். பிரதமரின் கனவான 2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதில், இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியம். பிரதமரின் கனவை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu