கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
கோவை சென்னி வீரம்பாளையம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து
கோவை காரமடை அடுத்த சென்னி வீரம்பாளையம் பகுதியில் சுமார் 4.16 ஏக்கர் பரப்பளவில் பஞ்சமி நிலம் உள்ளது. இங்கு தாழ்த்தப்பட்ட, வீடு இல்லாத மக்கள் சுமார் 140 பேர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர், மின்விளக்கு, சாக்கடை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த குடியிருப்புகளை ஒட்டியுள்ள காய்ந்த புற்களில் இன்று திடீரென தீப்பற்றியுள்ளது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பற்றி எரிந்து அருகில் இருந்த குடியிருப்பினை தீ சூழ்ந்தது. இதில் ஒரு குடிசையில் பற்றிய தீ தொடர்ந்து அடுத்தடுத்து வீடுகளுக்கும் காற்றின் வேகம் காரணமாக பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த 52 வீடுகள் முழுவதுமாக தீயில் எரிந்து சேதமாகின. வீடுகளில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் எரிந்து சேதமாகி உள்ளது.
பகல் நேரம் என்பதால் அனைவரும் வேலைக்குச் சென்று விட்ட காரணத்தால் வீடுகளில் எவரும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ஷ்டவசமாக ஆட்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம். அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் வீடுகள், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் இருந்து சேதமாயின.
இச்சம்பவம் குறித்து அறிந்த கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் குணசீலன் உள்ளிட்டோர் விரைந்து வந்து விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வேட்டி, சேலை, குடிநீர் பாட்டில்கள் வழங்கியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu