அன்னூர் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து :கோடை வந்திருச்சு..உஷார் மக்களே..!
அன்னூர் அருகே கோழிப்பண்ணையில் பற்றி எரியும் தீ.
கோடை துவங்கிவிட்டதால் தீ விபத்து அடிக்கடி நடந்து வருகிறது. வீட்டில் மட்டுமல்ல தோட்டம், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கூடங்கள் போன்றவைகளில் பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.
நேற்று முன்தினம் கோவை மாவட்டம்,அன்னூர் அல்லம்பாளையம் பகுதி கோழிப்பண்ணையில் தீவிபத்து நடந்த அடுத்த நாளே அன்னூர் ஆம்போதி அருகே கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்து. 8500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியான பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள ஆம்போதி மஜரா சாலையூரில் சின்னியகவுண்டர் என்பவரது மகன் கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. 2 கோழிப்பண்ணை ஷெட்டுகளில் சுமார் 8500 கறிக்கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பற்றியது. இச்சம்பவம் குறித்து கணேஷ்குமார் அன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இவ்விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த சுமார் 8500 கறிக்கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியாயின.மேலும்,இவ்விபத்தில் கோழித்தீவனங்கள்,மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின.இதன் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் இருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் அன்னூர் அல்லப்பாளையம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1800 கோழிக்குஞ்சுகள் எரிந்து சேதமான நிலையில் நேற்று மேலும் ஒரு கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் கோழிப்பண்ணை உரிமையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தொழிற் கூடங்கள் மற்றும் வீடுகளிலும் பொதுமக்கள் உஷாராகவும், விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டியது அவசியம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu