பாகுபலி யானைக்கு காலில் காயம்: கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு

பாகுபலி யானைக்கு காலில் காயம்: கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு
X

காலில் அடிபட்ட பாகுபலி யானை.

யானையின் வலது பக்க முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் காயம் ஏற்பட்டு இருப்பதும் அதன் காரணமாக யானை மெதுவாக நடப்பதும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் அடிக்கடி வனத்தை விட்டு வெளியே வரும் ஒற்றை ஆண் காட்டுயானை பாகுபலி தொடர்ச்சியாக ஊருக்குள் சுற்றி வந்தது. மேலும் விவசாய பயிர்களையும் சேதப்படுத்தியது. அந்த யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி பயிர் சேதத்தை தவிர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து அந்த ஒற்றை காட்டு யானை பாகுபலியை பிடித்து ரேடியோ காலர் கருவி பொருத்தி யானையின் நடமாட்டத்தைக் கண்டறிய வனத்துறையினர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். கும்கி யானைகள் உதவியுடன் பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி நடைபெற்ற நிலையில், அந்தப் பணி தோல்வியில் முடிந்ததால் அத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

ஊருக்குள் சுற்றிவந்த பாகுபலி யானை சில வாரங்களாக வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் வனப்பகுதியை விட்டு பாகுபலி யானை வெளியே வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோத்தகிரி சாலையில், சென்ற ஆண் காட்டு யானை பாகுபலியை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். அதில் யானையின் வலது பக்க முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் காயம் ஏற்பட்டு இருப்பதும், அதன் காரணமாக யானை மெதுவாக நடப்பதும், தெரியவந்தது. இதனையடுத்து அந்த யானைக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை கண்டறிந்து, அதற்கு ஏற்றார்போல் சிகிச்சை அளிக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமாரிடம் கேட்டபோது, யானையின் உடல் நலம் குறித்த தகவல் வந்ததை அடுத்து பாகுபலி யானையை சிறப்பு குழுவினர் கண்காணித்து வருகின்றனர். காலில் ஏற்பட்டுள்ள காயத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!