கோவை அருகே குடிநீர் குழாய் உடைப்பினால் வெளியேறிய தண்ணீரால் நிரம்பிய கிணறு
தரைக்கிணறு நிரம்பி குளம் போல் காட்சியளிக்கிறது.
கோவை அருகே கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வெளியேறிய தண்ணீரால் கிணறு நிரம்பியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பில்லூர் அணை உள்ளது. இந்த அணைக்கு கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பொழியும் மழைநீர் காட்டாறுகள் மூலம் பில்லூர் அணைக்கு வந்தடைகிறது. பில்லூர் அணையில் மின் உற்பத்திக்கு பின் பவானி ஆறு வழியாக உபரிநீர் தினசரி வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு வரும் நீரை மேட்டுப்பாளையம் தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கும், 20-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூர் மாவட்டத்திற்கு 1, 2-வது கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் குழாய்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் சாலை வழியாக செல்கிறது. அவ்வாறு செல்லும் போது நால்ரோடு, தேரம்பாளைம், நடூர் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், அவ்வப்போது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கசிவு நீர் சாலையோரங்களில் வழிந்தோடும். இதேபோல நேற்று இரவு மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட தேரம்பாளையம் கிராமத்தில் ஒரு இடத்தில் திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழாயில் இருந்து வெளியேறிய குடிநீர் அருகிலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் புகுந்தது.
அந்த தோட்டத்தில் 30 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. விடிய, விடிய தண்ணீர் பாய்ந்ததால் கிணறு முழுவதும் நிரம்பி வழிந்தது. கிணறு நிரம்பியதால் அருகிலுள்ள கருவேப்பிலை தோட்டத்திலும் தண்ணீர் சூழ்ந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது மழை பெய்ததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இந்த நேரத்தில் இவ்வளவு குடிநீர் வீணானது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெள்ளாதி ஊராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்திற்கு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிடைக்க வேண்டிய தண்ணீர் முழுமையாக கிடைக்காமல் உள்ளது. இச்சூழ்நிலையில் தேரம்பாளையம் பகுதியில் திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினசரி பல லட்சம் லிட்டர் குடிநீர் வரை வீணாகி வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu