வேகமெடுக்கும் பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டப் பணி

வேகமெடுக்கும் பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டப் பணி
X

பில்லூர் குடிநீர் திட்டம் - கோப்புப்படம் 

பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டப்பணியில் 70 சதவீதம் பணி முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் பில்லுார் அணை அருகே உள்ள மலைகளில் குகை அமைத்து, அணையில் இருந்து தண்ணீர் எடுத்து, கோவை மாநகராட்சி முதல் மற்றும் இரண்டாவது பில்லூர் குடிநீர் திட்டங்களுக்கு பம்பிங் செய்யப்படுகிறது.

இந்த தண்ணீர் வெள்ளியங்காடு சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்ட்டு குழாய்கள் மூலம் கோவைக்கு அனுப்பப்படுகிறது.

முதல் குடிநீர் திட்டத்தில், பாதி அளவு தண்ணீர் மட்டுமே மாநகராட்சி பகுதிகளில் வினியோகம் செய்யப்படுகிறது. மீதமுள்ள தண்ணீர் சூலூர், பல்லடம் மற்றும் வழியோர கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

இரண்டாவது குடிநீர் திட்டம் மாநகராட்சியின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கு, விநியோகம் செய்யப்படுகிறது. இருந்த போதும் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், குடிநீருக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதனால் கோவை மாநகராட்சிக்கு என தனியாக, பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம், 780 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றில் இருந்து, நாள் ஒன்றுக்கு, 1,783 லட்சம் லிட்டர் தண்ணீர் கோவைக்கு அனுப்பப்பட உள்ளது.

அதற்காக இத்திட்டத்துக்கு, குழாய் பதித்தல், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், கட்டாஞ்சி மலையில் குகை அமைத்தல், பவானி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணி நடந்து வருகிறது. தற்போது இந்தப்பணி வேகமெடுக்க துவங்கியுள்ளது.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றின் கரையோரம், 36.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுவரும் நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளுக்காக ராட்சத கிணறு அமைத்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கும் வகையில் அதில் இரு மின் மோட்டார்களை பொருத்தி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

ஆற்றில் உறிஞ்சி எடுக்கும் தண்ணீர், குழாய் வழியாக மருதூர் ஊராட்சி கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட உள்ளது. அதற்காக பவானி ஆற்றின் கரையோரம் நீரேற்று நிலையத்தில் கட்டுமான பணி துரிதமாக நடக்கிறது.

இந்த பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் கூறுகையில், கோவை மாநகராட்சி பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டப் பணி, வேகமாக நடந்து வருகிறது. கட்டாஞ்சி மலையில் குகை அமைக்கும் பணி 90 சதவீதமும், மலையடி வாரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலைய பணிகள் 85 சதவீதமும், பவானி நீரேற்று நிலையத்தில், 65 சதவீ பணிகளும் முடிவடைந்துள்ளன. இதுவரை, 70 சதவீதம் பணி முடிவடைந்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணி செய்து முடித்து, வெள்ளோட்டம் நடத்தி, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!