முதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக 40க்கு 40 வெற்றியை பெற்று தருவோம் - திமுக பூச்சி முருகன்

முதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக 40க்கு 40 வெற்றியை பெற்று தருவோம் - திமுக பூச்சி முருகன்
X

Coimbatore News- பூச்சி முருகன்

Coimbatore News- மீண்டும் பாஜக வந்தால் ஒரே தேர்தல் தான் நடக்கும். கழக தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக 40 க்கு 40 வெற்றியை கொண்டு வருவோம் திமுக பூச்சி முருகன் என்று பூச்சி முருகன் பேசினார்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிச்சி பிரிவு பகுதியில் திமுக சார்பில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அலுவலகம் திறப்பு விழா, நற்சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

அப்பகுதி செயலாளர் எஸ்ஏ.காதர் தலைமையில் நடந்த இந்த விழாவில் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தலைமை கழக செயலாளர் பூச்சி முருகன் கலந்து கொண்டு குறிச்சி வடக்கு பகுதி கழக அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து, அவர் சிறப்புரையாற்றுகையில், “இது என் குடும்பம், நாமெல்லாம் ஒரு தாய் வயிற்றில் பிறக்க முடியாததால், ஒவ்வொரு தாய் வயிற்றிலும் பிறந்துள்ளோம் என அடிக்கடி அண்ணா கூறுவார். நாம் எல்லாம் அப்படித்தான். திமுகவும் இஸ்லாமியர்களும் சகோதரர்கள். தலைவர் மாவட்ட செயலாளர் கூட்டத்தில், பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டாம், அதற்கு பதிலாக நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும் என கூறினார்.

முதலில் கோவையில் முப்பெரும் விழாவாக நடைபெற்று உள்ளது. தலைவர் என்ன சொல்கிறார் என்பதை அறிந்து செயல்படும் தொண்டனை கொண்டது திமுக. தொண்டனின் எண்ணங்களை செய்வது தான் தலைமை.

விடியல் பயணம் என்ற இலவச பேருந்து பயணம், மாதம் மாதம் ரூ ஆயிரம் வங்கி கணக்கில், மாணவ மாணவிகளுக்கு ஆயிரம் வங்கி கணக்கில், 15 ஆயிரம் ஸ்மாட் வகுப்பறைகள், ஊரக வேலைவாய்ப்பு திட்டம், கனவு இல்லம் திட்டம் 6 வருடத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டி தரப்போகிறோம். கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா,மெட்ரோ இரயில், குறிச்சி சிட்கோ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு. இந்த ஆட்சியில் 300 ஆண்டிற்கான திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு மாற்றான் தாய் போல் நடந்து கொள்கின்றது. நம்மிடம் வாங்கிய வரி பணத்தை கூட திருப்பி தர மாட்டிங்கிறாங்க, ஒரே நாடு ஒரே கட்சி என ஊடகங்களை கையில் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகளை நசுக்குகின்றது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றது. விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. மாநில திட்டங்களுக்கு புரியாத பெயர்களை சூட்டுகின்றது. மீண்டும் பாஜக வந்தால் ஒரே தேர்தல் தான் நடக்கும். தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக 40 க்கு 40 வெற்றியை கொண்டு வருவோம். இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். உரிமையை மீட்க ஸ்டாலின் குரல் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!