ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி குற்றச்சாட்டு

ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி குற்றச்சாட்டு
X

உதயநிதி ஸ்டாலின்

சசிகலாவிற்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி என உதயநிதி கூறியுள்ளார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி உறுதி. ஏப்ரல் 19 ம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று உதயசூரியன் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு. பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஒரு புல்லையாவது பிடுங்கி போட்டுள்ளாரா? ஆனால் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் வருவார்.

மோடி சூப்பராக வடை சுடுவார். அந்த வடையையும் அவரே சாப்பிட்டு விடுவார். அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 400 ரூபாயாக இருந்த கேஸ் சிலிண்டர் விலையை 1200 ரூபாயாக மோடி உயர்த்தியுள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருவோம். ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 60 ரூபாய்க்கும் தருவோம். இந்த முறை 3 இலட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ஈஸ்வரசாமியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு சாலைகள் சீரமைக்கும் பணிகளும், 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி அயத்த தொழில் வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. 60 ஆயிரம் மனுக்களை தீர்வு காணப்பட்டுள்ளது. 150 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் வாக்களித்து ஆதரவை பெற்று முதலமைச்சராக உட்கார்ந்தவர் ஸ்டாலின். யார் காலிலாவது போய் விழுந்தாரா? எங்காவது தவழ்ந்து போனாரா? அப்படி யார் முதலமைச்சரானார்? வெட்கம் கெட்ட, மானம் கெட்ட பாதம் தாங்கி எடப்பாடி பழனிசாமி. ஆறு மாத குழந்தை போல தவழ்ந்து தவழ்ந்து போயி சசிகலா காலை பிடித்து முதலமைச்சராகி, அவர் காலையே வாரி விட்டார்.

அவர் சசிகலாவிற்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பச்சை துரோகி பழனிசாமி. 4 ஆண்டுகள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து ஜல்ரா போட்டுக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களை அடகுவைத்தார். பாஜக உடன் சேர்ந்தால் 10 ஓட்டுகள் கூட விழாது என தேர்தல் நாடகம் ஆடுகிறார்கள். பழனிசாமி மோடியை பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்க முடியுமா? எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியுமா? அவர்கள் இருவரும் கூட்டுக் களவாணிகள்.

புயல், வெள்ளத்தின் போது மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை. 2500 கோடி ரூபாயை தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு முதலமைச்சர் தந்தார். ஆனால் மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதி தரவில்லை.

கோவிட் வார்டுக்குள் சென்று ஆய்வு செய்த ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். தேர்தல் வாக்குறுதியின் படி பெட்ரோல் விலை 3 ரூபாய், ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைத்தார். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டம் தந்தார். பெண்கள் படிக்க வேண்டும் என புதுமை பெண் திட்டம் மூலம் கல்வி ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். காலை உணவுத் திட்டம் மூலம் 18 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக இருப்பது தான் திராவிட மாடல் அரசு.

இன்னும் 5 மாதங்களில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும். பிரதமரை 29 பைசா என அழைக்க வேண்டும். தமிழ்நாடு ஒரு ரூபாய் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா தான் தருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு ரூபாய் தந்தால், அதைவிட அதிகமாக தருகிறது. தமிழ்நாட்டு மக்களை மதிக்கும் நல்ல பிரதமரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு