கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: கோவை எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்
சுகாதாரத் துறையினர் சோதனை
கேரள மாநிலத்தில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தான். இதையடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்த நபர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே கேரளாவின் சில பகுதிகளில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ள நிலையில், தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தை ஒட்டி இருக்கும் தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதிகளில் சுகாதாரத் துறையினர் இன்று காலை முதல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக வாளையார் சோதனை சாவடியில் முழு கவச உடை அணிந்த தமிழக சுகாதாரத் துறை ஊழியர்கள், பேருந்து மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கின்றனர்.
கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் வரும் 13 வழித்தடங்களிலும் சுகாதார துறையினர் இதேபோல சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுடன் வருபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலத்தில் தற்பொழுது ஐந்தாவது முறையாக நிபா வைரஸ் காய்ச்சலில் தாக்கம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu