கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
Coimbatore News- எல்லைப்பகுதியில் வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு.
Coimbatore News, Coimbatore News Today- கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பை அடுத்து தமிழக கேரளா எல்லையான வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழி பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது. இறந்த வாத்துகளை ஆய்வு மேற்கொண்டதில் எச்5 என்1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
கேரளாவில், பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் தமிழக கேரள மாநில எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி,மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்பட 12 சோதனைச்சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்பு துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்களை கொண்டு வரப்படுகிறதா? என்பதை கண்காணித்து, வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து கோவை மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் பெருமாள் சாமி கூறியதாவது, "தமிழக கேரளா எல்லையான வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச் சாவடிகளில் சிறப்பு கால்நடை குழுவினர் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளனர். கேரளாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படும் பறவைகள் தொடர்பாக பொருட்களை வாகனங்களில் கொண்டு வரும் வாகனங்களை எல்லையிலேயே நிறுத்தி கேரளாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu