இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்: ராகுல் காந்தி நம்பிக்கை
ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின்.
கோவை செட்டிப்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது பேசிய ராகுல் காந்தி, ”நான் தமிழ்நாட்டிற்கு வருவதை விரும்புகிறேன். இந்த மாநில மக்களின் மொழி, வரலாறு எனக்கு வழிகாட்டியாக உள்ளது. இன்று சித்தாந்த போர் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தேர்தலுக்கு பிறகு மோடி அரசு போய்விடும். இதனை நரேந்திர மோடியின் அரசு அல்ல, அதானி அரசு என அழைக்க வேண்டும். அவர் பல வேலைகள் அதானிக்காக செய்து கொண்டிருக்கிறார். விமான நிலையம், துறைமுகம், நெடுஞ்சாலை என அனைத்தையும் அவருக்கு கொடுத்துள்ளது. பாராளுமன்றத்தில் அதானி பற்றி பேசியதும், என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சில வாரங்களில் பறிக்கப்பட்டது. எனது வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டேன். எனக்கு இலட்சக்கணக்கான மக்களின் வீடுகள் இருக்கின்றன. தமிழ்நாடு மக்களின் வீடுகள் எனக்காக திறந்துள்ளது.
எனக்கும் உங்களுக்கும் அரசியல் ரீதியாக உறவு அல்ல, குடும்ப ரீதியான உறவு உள்ளது. உங்களுக்கு என தனி வரலாறு உள்ளது. பெரியார், அண்ணாதுரை, காமராஜர், கலைஞர் ஆகியோர் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களின் உணர்விலும், உயிரிலும் கலந்தவர்கள். ஏன் எங்கள் மொழி, வரலாறு, பாரம்பரியம் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? இங்கு வந்து பிரதமர் மோடி தோசை பிடிக்கும். டெல்லிக்கு சென்றால், ஒரே நாடு ஒரே மொழி என்கிறார். ஏன் ஒரே மொழி? ஏன் தமிழ், கன்னடா மொழிகள் இல்லை? இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியினால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு தோசை, வடை பிடிக்கும் என்பது பிரச்சனை இல்லை.தமிழ் மொழியை பிடிக்குமா? இந்த நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன செய்தீர்கள்?
எனது அண்ணன் ஸ்டாலின். நான் வேறு யாரையும் அண்ணன் என அழைப்பதில்லை. மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திர ஊழல். பாஜக வாசிங் மைசினை வைத்துள்ளது. முதலில் மோடி அரசியலை சுத்தப்படுத்த போகிறேன் என்றார். அதற்காக புதிதாக தேர்தல் பத்திரம் கொண்டு வந்துள்ளார். அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும், யார் என வெளியே தெரியாது. உச்ச நீதிமன்றம் இது சட்டவிரோதம் என்றது. யார் பணம் கொடுத்தார்கள் என்பதை உச்ச நீதிமன்றம் வெளியிட கூறியதும், விவரங்களை வெளியிட்டார்கள். இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பாஜகவிற்கு சென்றுள்ளது. சிபிஐ, இடி, ஐடி விசாரணை நடத்திய சில நாட்களில் பாஜகவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெற்றதும், வழக்கு திரும்ப பெறப்பட்டது. அதானி அரசை கட்டுப்படுத்தி கொண்டுள்ளார். உலகில் இதுபோல வேறு யாரும் ஊழல் பண்ணவில்லை. ஆனால் மோடி சுத்தமான அரசியல்வாதி என்கிறார்.
வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியை விட இந்தியா மோசமாக உள்ளது. 30 விவசாயிகள் ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்கிறார்கள். இந்தியா கூட்டணி என்ன செய்ய போகிறது வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை தீர்ப்போம் 30 இலட்சம் காலி பணியிடங்களை இளைஞர்களுக்கு வழங்குவோம். பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்களுக்கு அப்ரசண்டிஸ் சட்டம் மூலம் ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்படும் நீங்களே நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்கலாம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தருவேன் என உத்தரவாதம் அளிக்கிறேன். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம். 2024 ல் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும். மோடி, அதானி அரசியல் இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளது. ஒன்று கோடிஸ்வரர்கள் இந்தியா, இன்னொன்று ஏழைகள் இந்தியா. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஒரு இலட்ச ரூபாய் தருவோம். இட ஒதுக்கீடு வழங்குவதற்கான 50 சதவீத உச்ச வரம்பை நீக்குவோம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்
இது சாதாரணமாக தேர்தல் அல்ல. தத்துவ போர். மக்களின் வரலாறு, மொழி, உரிமை, அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் என்பது புத்தகம் அல்ல. நாட்டின் ஆத்மா. நாட்டின் ஆத்மா மோடி, ஆர்.எஸ்.எஸ். தாக்கப்படுகிறது. இந்தியா என்பது ஆர்.எஸ். எஸ் அமைப்பிற்கு சொந்தமானது அல்ல. தேர்தல் ஆணையம், நீதிமன்றம் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ் தனது ஆட்களை நியமித்துள்ளது. இது இந்திய ஒன்றியத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். சிபிஐ, ஐடி, இடி வைத்து ஐனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த நாடு பிரதமரின் சொத்து அல்ல, இந்த நாடு மக்களுக்கு சொந்தமானது. அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாக்கும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். வேட்பாளர்களை பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu