கிணத்துக்கடவு பகுதியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்; தடுப்பு நடவடிக்கை தீவிரம்
Coimbatore News, Coimbatore News Today- கிணத்துக்கடவு பகுதியில் காய்ச்சல் அதிகரிப்பு.(கோப்பு படம்)
Coimbatore News, Coimbatore News Today- கோவை, கிணத்துக்கடவில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கிணத்துக்கடவு பகுதியில் தற்போது கடுமையான வெயில் வாட்டி வருகிறது. மறுபுறம், வைரஸ் காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. அதாவது காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, இருமல் உள்ளிட்டவைகளால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, இருமலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் அதிக வைரஸ் காய்ச்சல் பகுதிகளை கண்டறிந்து தினசரி 3 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இ்ந்த பணியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையில் டாக்டர்கள் சமீதா, அருண் பிரகாஷ், சிவச்சந்திரன், பிரித்திகா, பவானி, பிரபு, திலிப்குமார், கவிதா ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது,
வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், மற்றவருக்கும் பரவும் சூழ்நிலை உள்ளதால், அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும். மாத்திரை, மருந்துகளை டாக்டர் ஆலோசனை இன்றி சாப்பிடக்கூடாது. காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். கிராமங்கள்தோறும் மருத்துவ முகாம் தவிர நடமாடும் வாகனம் மூலமும் மருத்துவ சிகிச்சை மற்றும் ரத்த பரிசோதனை செய்து வருகிறோம்.
காய்ச்சல் பாதித்த நபர்கள், உடனடியாக காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமிற்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் உயர் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும். காய்ச்சல் வந்த நபர்கள் அதிகப்படியான திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது உப்பு சர்க்கரை கரைசலை அடிக்கடி அருந்த வேண்டும். இதனால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கு முடியும். டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகடைகளில் மருந்து வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் காய்ச்சல் பாதித்த நபர்கள் தனிமையில் இருக்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் வெளியிடங்களுக்கு அல்லது கூட்டங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்ற நடைமுறைகளை கடைபிடித்ததால் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படும். மேலும் காய்ச்சல், சளி, இருமல் உள்ள நபர்கள் உடனடியாக காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமிற்கோ அல்லது அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கோ அல்லது அரசு ஆஸ்பத்திரிகளுக்கோ சென்று சென்று சிகிச்சை பெற வேண்டும். இதனால் காய்ச்சலின் தாக்கத்தில் இருந்து தவிர்க்க முடியும்.
பொதுமக்கள் நன்கு கொதித்து ஆறிய குடிநீர் அல்லது குளோரினேஷன் செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட குடிநீரையே பயன்படுத்த வேண்டும். தங்கள் வீடுகளை சுற்றிலும் சுற்றுப்புறத்திலும் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும். வீடுகளில் உள்ள குடிநீர் பாத்திரங்கள், சிமெண்ட் தொட்டிகள், மண் பானைகள் போன்றவற்றில் கொசு புகாதவாறு நன்கு மூடிவைத்து பராமரிக்க வேண்டும். கொசுப்புழுக்கள் ஏற்பட்டால் உடனடியாக தண்ணீரை கவிழ்த்து கொசுப்புழுக்களை அழித்து விடவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu