பாஜக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது : ஜவாஹிருல்லா..!
மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்தார்.
கோவை கரும்புக்கடை பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு அமோகமான ஆதரவு உள்ளது எனத் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய பலவற்றை சிதறடித்துள்ளதாக கூறினார். வருகின்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவின் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி அளிப்பார்கள் என்ற நம்பிக்கை தேர்தல் பரப்புரையின் போது காண முடிகிறது என தெரிவித்தார்.
நேற்றைய தினம் பாஜகவின் சார்பில் சங்கல்பத்ரா என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதை குறிப்பிட்ட அவர் அதனை படித்துப் பார்க்கும் பொழுது அது சங்கட பத்ராவாகத்தான் இருக்கின்றது என்று குறிப்பிடலாம் என்றார். 2019 ஆம் ஆண்டு பாஜக கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனவும் 2014ஆம் ஆண்டு வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு 15 லட்சம் 20 லட்சம் ரூபாய் வரை இந்தியர்களின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று பாஜகவினர் கூறியதாக தெரிவித்தார்.
மேலும் தற்பொழுது உள்ள உள்துறை அமைச்சர் அப்போது தேர்தல் நேரத்தில் பேசியதை எல்லாம் ஏன் இவ்வாறு சீரியஸாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்கிறார் என தெரிவித்தார்.10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என கூறினார். மேலும் பாஜக தேர்தல் அறிக்கை சங்கடங்களை ஏற்படுத்துகிறது எனவும் மக்களை ஏமாற்றும் தந்திரமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் அறிக்கை நடைமுறையில் சாத்தியமாக இருக்க கூடியவையாக உள்ளது எனவும், காங்கிரஸ் அறிக்கை ஆக்கபூர்வமான அறிக்கை, பாஜக அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது என்றார். கோவை, பொள்ளாச்சி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
மேலும் பாஜகவினர் எப்போதும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்து கொண்டு பல்வேறு காரியங்களை செய்யக்கூடியவர்கள் எனவும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படுகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும் என தெரிவித்தார். 10 மணிக்கு மேல் மைக்கையும், லைட்டையும் உபயோகிக்க கூடாது, 10 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரை செய்வது சட்ட மீறல். இதனை இந்தியா கூட்டணியினர் செய்தால் விட்டு விடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu